சிறுவர் பாடல்கள் <body bgcolor="#FFFFFF">
 

 

சிறுவர் பாடல்கள்
 

Friday, December 16, 2005

ஒன்று ரெண்டு மூன்று நாலு

வசந்தன் பதிந்திருந்த பாடல் இது. ஓரிடத்தில் சேர்த்து வைக்கும் பொருட்டு இங்கே இட்டு வைக்கிறேன்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.

ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்கலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ.

உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.
-------------------------------------------

மேற்கண்ட பாடலைப் பாட வசதியாக அசை பிரித்துப் பார்த்தால் கீழ்க்கண்டவாறு வரும்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.

ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை
தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.

உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி
ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே
பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே

நன்றி வசந்தன்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.


posted by சுந்தரவடிவேல் at 12/16/2005 04:05:00 PM 4 comments


Monday, November 21, 2005

மிருகக் காட்சி சாலை

Image hosted by Photobucket.com

நாங்களும் மகனுக்குத் (மாசிலன், 3+) தமிழ்ப் புத்தகமெல்லாம் வாசிச்சுக் காட்டுறோம். ஆனாலும் ஆங்கிலப் புத்தகங்கள் கவருமளவுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் அவரைக் கவர்வதில்லை. இதற்கு முக்கியக் காரணம் புத்தகங்களின் வடிவமைப்பு என்றுதான் சொல்வேன். தெளிவற்ற படங்கள், உறுதியற்ற காகிதங்களும் அட்டைகளும், சில சமயங்களில் எரிச்சலூட்டும் உள்ளடக்கங்கள் இப்படியாக இருந்தால் பிள்ளைகளுக்கு ஆர்வம் குறைவதில் வியப்பில்லைதானே? சரி, நாமாகவே மாசிலனுக்குச் சில புத்தகங்களைச் செய்யலாமா என்றொரு எண்ணம் கிளம்பி, ஒரு பாடலொன்றை எடுத்துத் தட்டச்சி, படங்களை எடுத்துப் போட்டு, அச்செடுத்துக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். இதை மாசிலன் ஓரளவுக்கு விரும்பிப் படிக்கிறார். இதைப் போல் மேலும் செய்ய எண்ணம். இந்தப் பாடலை ஒரு பக்கத்துக்கு இரண்டிரண்டு வரிகளாக அந்தந்த விலங்குப் படங்களுடன் powerpoint ஆகச் செய்திருக்கிறேன். வேண்டுவோர் இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; அது வேலை செய்யவில்லையென்றால் எனக்கு ஒரு மின்னஞ்சல் (sundarappaa at யாஹ¥ டாட் காம்) அனுப்பினால் பெற்றுக் கொள்ளலாம்.

மிருகக் காட்சி சாலை

அம்மா அப்பா அழைத்துச் சென்றார்
அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்
ஆடத் தொடங்கின
பொல்லா நரியும் புனுகுப் பூனையும்
எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி
கூட நின்றன
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து
குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை
ஆட்டி நின்றது
முதலைத் தலையைத் தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று
சிங்கம் புலி எல்லாம் கண்டேன்
கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன்
சிறிதும் அஞ்சவில்லை
சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!

(இந்த ஈழப் பாடலுக்கு நன்றி: ஜானா மற்றும் குடும்பத்தினர்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.


posted by சுந்தரவடிவேல் at 11/21/2005 11:47:00 AM 4 comments


Wednesday, March 16, 2005

ஓவியர்களே இசையார்வலர்களே உதவி தேவை

சிறுவர் பாடல்களை ஓரிடத்தில் தொகுப்பதற்காக இந்தக் கூட்டு வலைப்பதிவு தொடங்கப் பட்டது. பாடல்களின் வரி வடிவத்தை மட்டும் இடாமல் இன்னும் சில விஷயங்களைச் சேர்த்தால் சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றியது(பின்னூட்டங்களிலும் சொன்னார்கள்).
அதன்படி இரண்டு விஷயங்களைச் செய்யலாம் என்றிருக்கிறோம்.

1. பாடலுக்கேற்ற ஓவியம் ஒன்றை இணைப்பது. உதா, மரப்பாச்சி என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகள் இருக்கிறார்கள்(பெரியவர்களும்). அவர்களுக்காக பாடலில் வரும் மரப்பாச்சி மற்றும் சம்பவங்களை ஓவியத்தில் காட்டுவது.

2. எல்லோருக்கும் எல்லாப்பாடல்களும் தெரிவதில்லை. இந்தியாவில் புழங்கும் பாடல்களை மற்ற தேசத்தவர் எப்படிப் பாடுவது என்று திணறலாம். அதேபோல இலங்கையில் புழங்கும் பாடல்கள் ஏனையவர்களுக்குப் புதிதாக இருக்கும். குரல் வளம் பெற்றவர்கள் முழுப்பாடலையோ, பாடலின் ஒரு பகுதியையோ பாடிப் பங்களிக்கலாம்.

ஓவியங்களை இக்கூட்டு வலைப்பதிவினை நிர்வகிக்கும் சுந்தரவடிவேல், மாலன் & மதி ஆகியோரிடம் சேர்ப்பித்துவிடலாம்.

பாடல்களைச் சேர்ப்பிப்பதில்தான் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. கூகுள் Blogger நிறுவனத்தால் ஆடியோ ப்ளோக்கர் வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள். இப்போதைக்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு தொலைபேசி எண்ணை அழைத்து பேச/பாடலாம். அவ்விதம் செய்வதில் பிரச்சினையில்லாதவர்கள் உதவுங்களேன். mp3, wma, rm என்று பாடல்களைப் பதிவு செய்தும் அனுப்பலாம். வலையேற்ற வசதி செய்து தருகிறோம்.

உதவ முன்வாருங்கள் நண்பர்களே.

பி.கு.: படைப்பின் அனைத்து உரிமைகளும் படைப்பாளியைச் சார்ந்தது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.


posted by மதி கந்தசாமி (Mathy Kandasamy) at 3/16/2005 10:27:00 AM 5 comments


Tuesday, March 08, 2005

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி

Image hosted by Photobucket.com

          மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி
          மாளவில்லை வேலை தொல்லை
          பசுவும் வெளியே காத்திருக்க
          பால் கறக்க நேரமில்லை
          கண்கள் இரண்டும் சொக்கிப் போச்சு
          கால்கள் இரண்டும் மருகிப் போச்சு
          வைத்தியரும் அருகே இல்லை
          வகை ஒன்றும் தெரியவில்லை
          இடிச்ச இஞ்சிச் சாறெடுத்து
          இம்மி மிளகு உடன் சேர்த்து
          சுக்குக் கசாயம் போட்டேனடி
          சுரமும் காத்தாய்ப் பறந்து போச்சு.


(குறிப்பு, கொஞ்சம் பெரியவர்களுக்கு: நான் சின்னப் பிள்ளையில் வைத்திருந்த எவ்வித ஒப்பனைகளுமற்ற, நிறம் பூசப்படாத, ஆணா பெண்ணா என்று முகம் கூடத் தெளிவில்லாத ஆனால் எல்லாமுமாயிருந்த அந்த மரப்பாச்சிக் கட்டையின் படத்தை யாராவது கண்டால் தரவும்!)

படம் நன்றி: dollsofindia.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.


posted by சுந்தரவடிவேல் at 3/08/2005 03:42:00 AM 7 comments


Monday, March 07, 2005

கத்தரி வெருளி

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

     கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

          காவல் புரிகின்ற சேவகா! - நின்று

          காவல் புரிகின்ற சேவகா!

     மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

          வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

          வேலை புரிபவன் வேறுயார்?



     கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

          காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

          காவல் புரிகின்ற சேவகா!

     எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

          ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்

          ஏவல் புரிபவன் வேறுயார்?



     வட்டமான பெரும் பூசினிக்காய் போல

          மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்

          மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

     கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே

          கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு

          கைகளில் அம்பொடு வில்லைப்பார்!



     தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

          சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

          சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

     கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

          கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

          கட்டை உடைவாளின் தேசுபார்!



     பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

          பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்

          பொல்லாத பார்வையுங் கண்டதோ ?

     வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு

          வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

          வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே



     கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

          கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

          கத்திக் கத்திக் கரைந்தோடுமே

     நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு

          நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

          நடுநடுங்கி மனம் வாடுமே



     ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

          ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

          ஏவற்காரன் நீயே யென்னினும்

     ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

          ஆவதறிந்தன னுண்மையே - போலி

          ஆவதறிந்தன னுண்மையே



     தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்

          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

     சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

          தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

          தெரிய வந்ததுன் வஞ்சகம்



     சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

          தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

          தேசத்திலே பலர் உண்டுகாண்

     அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

          அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

          அறிவு படைத்தனன் இன்றுநான்.




வேண்டுகோள்:

இந்தப்பாடலில் விவரித்திருக்கும் வெருளியை யாரேனும் வரைந்து தந்தால் நன்றாகவிருக்கும்.


வெருளி செய்வதெப்படி? - http://www.powen.freeserve.co.uk/kids/scarecrow/scarecrow.htm

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.


posted by மதி கந்தசாமி (Mathy Kandasamy) at 3/07/2005 11:02:00 AM 15 comments



About

Links

Previous Posts

Archives

links to this post

Credits

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது