மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி
மாளவில்லை வேலை தொல்லை
பசுவும் வெளியே காத்திருக்க
பால் கறக்க நேரமில்லை
கண்கள் இரண்டும் சொக்கிப் போச்சு
கால்கள் இரண்டும் மருகிப் போச்சு
வைத்தியரும் அருகே இல்லை
வகை ஒன்றும் தெரியவில்லை
இடிச்ச இஞ்சிச் சாறெடுத்து
இம்மி மிளகு உடன் சேர்த்து
சுக்குக் கசாயம் போட்டேனடி
சுரமும் காத்தாய்ப் பறந்து போச்சு.
(குறிப்பு, கொஞ்சம் பெரியவர்களுக்கு: நான் சின்னப் பிள்ளையில் வைத்திருந்த எவ்வித ஒப்பனைகளுமற்ற, நிறம் பூசப்படாத, ஆணா பெண்ணா என்று முகம் கூடத் தெளிவில்லாத ஆனால் எல்லாமுமாயிருந்த அந்த மரப்பாச்சிக் கட்டையின் படத்தை யாராவது கண்டால் தரவும்!)
படம் நன்றி: dollsofindia.com
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
posted by சுந்தரவடிவேல் at 3/08/2005 03:42:00 AM 7 comments


7 Comments:
சுந்தரவடிவேல்,
மிக அழகான வடிவமைப்பு. பின்னாளின்/இன்னாளில் திரும்பத் தேவைப்படும் வகையில் "reference value" உள்ள சில வலைப்பதிவுகளில் இதுவும் ஒன்று. பாராட்டுக்கள்.
நீதானா இது!
நான் மரப்பாச்சி என்றதும் படிப்போமே, அந்த (நீ குறிப்பிட்ட மாதிரியான) மரப்பாச்சியைப்பார்ப்போமே என்று இங்கு வந்தேன். பார்த்தால் நீ.
இந்தப்படம் அருமை; ஆனால் மரப்பாச்சியில்லை. இது பொம்மை மட்டுமே. மரப்பாச்சி பொம்மையில்லை. அது சமயங்களில் தாய், அது பேசிக்கொள்ள ஒர் தோழன், நமக்கு பரிவான வாத்தியார், திட்டுவாங்கும் அடிமை, ரகசியம் தெரிந்த நட்பு, சமயங்களில் துயராற்றும் கடவுள்.
அதை, அப்படி தெளிவான வடிவற்று, பால் அடையாளமற்று, நிறமற்று, உடையாத கட்டையில் பண்ணியிருப்பது ஒரு விளையாட்டுக் கருவியின் எல்லைகளை உடைத்து அதை குழந்தையின் உலகில் முற்றாகக் கலப்பதற்கான உத்தியோ; அது குழந்தையின் கற்பனையினை குறுக்காமல் அனுமதிக்கும் வடிவமோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்.
நன்றி மரப்பாச்சிக்கும், உனக்கும், பாடலை எழுதியவருக்கும்.
///அதை, அப்படி தெளிவான வடிவற்று, பால் அடையாளமற்று, நிறமற்று, உடையாத கட்டையில் பண்ணியிருப்பது ஒரு விளையாட்டுக் கருவியின் எல்லைகளை உடைத்து அதை குழந்தையின் உலகில் முற்றாகக் கலப்பதற்கான உத்தியோ; அது குழந்தையின் கற்பனையினை குறுக்காமல் அனுமதிக்கும் வடிவமோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்.///
தங்கமணி,
மரப்பாச்சி பற்றிச் சொன்னதே கவிதை மாதிரி இருக்கிறது. இதை தனிப்பதிப்பாய்ப் போட்டிருந்தால் நிறையப் பேர் படித்திருப்பர்.
அந்த மாதிரி ஒரு மரப்பாச்சியின் படத்தைத் தேடி அலுத்துப் போனேன். கடைசியில் இதுதான் கிடைத்தது. அந்த மரப்பாச்சி எந்த வீட்டுப் பரணில் கிடக்கிறதோ!
தனியாகத்தான் எழுத நினைத்தேன் முத்து. எப்பவாவது வரும்.
எனக்கும் என்னுடைய வீட்டில் இருந்த குடும்ப மரப்பாச்சி பொம்மை ஞாபகத்திற்கு வருகிறது. எனது பெரிய அண்ணனுக்காக செயதது.. என்னுடைய தம்பி வரை கை மாறியது. பெரிய பொக்கிஸம் போல (??) வைத்து காப்பாற்றியது இன்றும் ஞாபகத்தில் உள்ளது
மகள் மறந்த சீதனம்
மறுவீடு சென்ற மண மகளே
மறந்து சென்ற மரப்பாச்சி இங்கே
புகுந்தவீடு சென்ற பொன் மகளே
பிரிந்து சென்ற பொம்மை இங்கே
பட்டம் படித்த புத்தகம் இங்கே
சட்டம் பேசும் மொழிகள் அங்கே
வாட்டம் கொண்ட உயிர்கள் இங்கே
நாட்டம் கொண்ட நங்கை அங்கே
தோட்டம் பூத்த மலர்கள் இங்கே
தொடுத்து வைத்த மாலை இங்கே
ஆட்டம் போடும் அழகி அங்கே
அள்ளிச்சூடும் அருமை அங்கே
சட்டைப் பையில் காசு இங்கே
சட்டென எடுக்கும் கைகள் அங்கே
அட்டைப் பெட்டியில் ஆடைகள் இங்கே
அணிந்து மகிழ்ந்த அழகி அங்கே
ஓட்டி மகிழ்ந்த வாகனம் இங்கே
உட்கார்ந்து வந்த ஊர்வசி அங்கே
வாட்டி எடுக்கும் நினைவுகள் இங்கே
வாதம் செய்யும் நங்கை அங்கே
ஊட்டி விட்ட உற்றார் இங்கே
உண்ணாது ஓடும் உரியவள் அங்கே
ஆட்டி வைத்த அரசி அங்கே
அவளின் நினைவில் நாங்கள் இங்கே
பொட்டு வைத்த பெற்றோர் இங்கே
போக்கு காட்டும் பொற்கொடி அங்கே
விட்டுக் கொடுத்த பெற்றோர் இங்கே
விந்தை காட்டும் விழியாள் அங்கே
கண்போல் காத்த காவலர் இங்கே
கருத்தில் கொண்ட கண்மணி அங்கே
பொன்போல் போற்றிய பெற்றோர் இங்கே
பொறுப்பாய் சென்ற பொன்மகள் அங்கே
உன்னை நோக்கி உறவுகள் இங்கே
உணர்ந்து கொள்வாரா உன்னவர் அங்கே
விண்ணை நோக்கி விழிகள் இங்கே
வந்து செல்வாயோ வளர்மதி இங்கே
ச.சந்திரசேகரன்
Post a Comment
<< Home